பிரசவ மற்றும் குழந்தைகள் நல சிகிச்சையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதல் இடம்


பிரசவ மற்றும் குழந்தைகள் நல சிகிச்சையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதல் இடம்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 8:03 PM GMT)

பிரசவ மற்றும் குழந்தைகள் நல சிகிச்சையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை இதற்கான விருது வழங்கியதுடன் 3 ஆண்டுகளுக்கு ரூ.13½ கோடி நிதியுதவியும் வழங்குகிறது.

விருதுநகர்,

அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவம் மற்றும் குழந்தைகளுக்கான சிகிச்சை அளித்தல், பெண்களுக்கான சிகிச்சை பிரிவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை பற்றி லக்சையா திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்த மத்திய அரசின் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. 2017–2018–க்கான ஆய்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. 2 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவ சிகிச்சை மற்றும் குழந்தை பராமரிப்பில் முறையே 92, 91 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. மாநில அளவில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திட்ட செயலாளர் மனோஜ்ஜெலானி அறிவித்துள்ளதோடு அதற்கான பிளாட்டினம் விருதினையும், சான்றிதழையும் மாநில சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி உள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மாதம் 1800 பிரசவங்கள் நடைபெறும் நிலையில் 75 பிரசவங்கள் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெறுவதாக தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளை மூன்றாவது மாதம் முதல் பிரசவம் ஆகும் வரை முறையான கண்காணிப்பு நடைமுறை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர். லக்சையா திட்டத்தின் கீழ் முதலிடம் பெற்றுள்ள விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மத்திய சுகாதாரத்துறை ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கும். அதன்படி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் 450 படுக்கைகள் உள்ள நிலையில் ஆண்டுக்கு ரூ.4½ கோடி நிதியுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ரூ.13½ கோடி நிதி உதவி கிடைக்கும். இந்த நிதி உதவியில் 75 சதவீதம் நிதியினை அரசு ஆஸ்பத்திரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், 25 சதவீதம் அரசு ஆஸ்பத்திரி அலுவலர்களுக்கு ஊக்க தொகையாகவும் வழங்கப்படும் என அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story