மத்திய அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


மத்திய அரசு திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 6 Jan 2019 12:00 AM GMT (Updated: 5 Jan 2019 8:11 PM GMT)

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை என மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

மதுரை,

விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கத்தின் 4–வது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. பாரதீய கிசான் சங்க மாநில தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றுப் பேசினார். சுவாமி சிவயோகானந்தா ஆசியுரை வழங்கினார். அகில பாரத தலைவர் பசவே கவுடா, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பேசியதாவது:–

விவசாயிகளுக்காக தேசிய அளவில் இருக்கும் ஒரே சங்கம் பாரதீய கிசான் சங்கமாகும். இந்த சங்கம் கடந்த 1979–ல் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு விவசாயியாக கலந்துகொள்கிறேன். விவசாயிகளின் உழைப்பின் மூலம் நம் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது. உணவு உற்பத்தியிலும் அதிக வளர்ச்சி பெற்றிருக்கிறது. நமது நாட்டில் 50 சதவீதம் பேர் விவசாயம் செய்கிறார்கள்.

பால், முந்திரி, இஞ்சி போன்ற பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தை பெற்றிருக்கிறது. கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் 2–வது இடத்தில் உள்ளது. பருத்தி, கால்நடை வளர்ப்பில் முதல் இடத்தையும், தேயிலை ஏற்றுமதியில் முதல் இடத்தையும் பெற்றிருக்கிறது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. அந்த திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

விவசாயிகள், ஒவ்வொரு முறையும் பயிரிடும்போது மண்ணின் தன்மையை ஆராய்ச்சி கூடங்களில் பரிசோதிக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிரிட்டால் அதிக லாபம் கிடைக்கும். தலைமுறை தலைமுறையாக இந்த பயிர்தான் பயிரிடப்படுகிறது என்பதற்காக நாமும் அதனை பயிரிடக்கூடாது. நானும் விவசாயி என்பதால் விவசாயத்தில் உள்ள சிக்கல்கள், சவால்கள் பற்றி எனக்கும் தெரியும். தற்போதுள்ள விவசாயிகள் ஏராளமான சவால்களை சந்திக்கின்றனர். அதனை சமாளிப்பதற்கு வசதியாக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறது. அது பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்ளவேண்டும்.

விவசாயிகள், விவசாயம் மட்டுமின்றி கால்நடைகளையும் வளர்க்க கற்று கொள்ள வேண்டும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு கால்நடைகளையாவது வளர்க்க வேண்டும். அதிகம் உழைக்கும் சக்தி கொண்ட விவசாயிகளுக்கு கால்நடைகளையும் சேர்த்து வளர்ப்பது கஷ்டமாக இருக்காது. விவசாயத்துடன் கால்நடைகளையும் வளர்த்தால் வாழ்நாள் முழுவதும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். விவசாயிகளுக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என்னிடம் கூறுங்கள். அதனை பிரதமர், ஜனாதிபதிக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நான் எப்போதும் விவசாயிகளுடன் தொடர்பில் இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கும், கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கும் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதை வாபஸ் பெற வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய எந்திரங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச தொடங்கியபோது, ‘அனைவருக்கும் மாலை வணக்கம்‘ என்று தமிழில் கூறிவிட்டு, பின்னர் ஆங்கிலத்தில் பேசினார். பேச்சின் இடையே ‘தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என்று மீண்டும் தமிழில் பேசினார். இதனை கேட்டதும் கூட்டத்தினர் கைத்தட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.


Next Story