திருமங்கலம் அருகே டாஸ்மாக் குடோனில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல்; மேலாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


திருமங்கலம் அருகே டாஸ்மாக் குடோனில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல்; மேலாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 8:11 PM GMT)

திருமங்கலம் அருகே கப்பலூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதன் மேலாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே கப்பலூரில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து திருமங்கலம், திருநகர், சமயநல்லூர், உசிலம்பட்டி உள்ளிட்ட 20–க்கும் மேற்பட்ட கடைகளுக்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த குடோனின் மேலாளர் அமுதன் என்பவர் நேற்று காலை டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டுள்ளார். அப்போது டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் தனக்கு பணம் தர வேண்டும் என்று அமுதன் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சில டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யசீலன், இன்ஸ்பெக்டர் குமரகுரு ஆகியோர் தலைமையில் 10–க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு கப்பலூர் டாஸ்மாக் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் குடோன் மேலாளர் அமுதனிடம் இருந்து ரூ.53 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது.

இது தொடர்பாக அமுதனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story