10–ம் வகுப்பு தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; கல்வித்துறை தகவல்
10–ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியுற்ற தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை வருகிற 7–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை பின்வரும் சேவை மையங்களில் நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆண் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை புதுவை சோலைநகர் ஸ்ரீஅரவிந்தர் மேல்நிலைப்பள்ளியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் புதுவை கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வு கட்டண தொகை ரூ.125, இவற்றுடன் பதிவு கட்டணம் ரூ.50, சேர்த்து மொத்தம் ரு.175–ஐ மேற்குறிப்பிட்ட சேவை மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.
நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சியில் கலந்துகொண்டமைக்கான வருகை சான்றிதழ் அசல் மற்றும் 8–ம் வகுப்பு தேர்ச்சி, 9–ம் வகுப்பு, 10–ம் வகுப்பு படித்தமைக்கான மாற்று சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற தனித்தேர்வர்கள் தேர்ச்சிபெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சியில் கலந்துகொண்டமைக்கான வருகை சான்றிதழ் அசல் இணைக்கப்பட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவு செய்ய தவறிய தனித்தேர்வர்கள் வருகிற 7–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை தங்களது பெயரை மேற்கூறிய சேவை மையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு புதுச்சேரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்படும். தேர்வுமைய விவரம் தேர்வுக்கூட அனுமதிசீட்டில் குறிப்பிடப்படும். தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. எனினும் தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் இணை இயக்குனர் குப்புசாமி கூறியுள்ளார்.