புயல் நிவாரணம் வழங்க கோரி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


புயல் நிவாரணம் வழங்க கோரி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Jan 2019 4:15 AM IST (Updated: 6 Jan 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

புயல் நிவாரணம் வழங்க கோரி கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியை அதிகாரிகள் புறக்கணிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணச்சேரி ஊராட்சி உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விவசாயிகள் அதிகம் உள்ள அந்த பகுதியில் புயலின் தாக்குதலால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அதை சீரமைக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள மற்ற ஊராட்சி பகுதிகளில் வீடுகளுக்கான இழப்பீடு தொகை மற்றும் அரசின் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் திரு மணச்சேரி ஊராட்சியில் ஒருவருக்கு கூட இன்னும் இழப்பீடு தொகையோ, நிவாரண பொருட்களோ வழங்கப்பட வில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் செய்த போதும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருமணச்சேரி பகுதியை அதிகாரிகள் புறக்கணிப்பதாக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகைசாமி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story