பெங்களூருவில் சந்தனமர கடத்தல் வழக்கில் தந்தை-மகன் கைது ரூ.45½ லட்சம் நகை-பணம் பறிமுதல்
பெங்களூருவில், சந்தனமர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூருவில், சந்தனமர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். கைதானவர் களிடம் இருந்து ரூ.45½ லட்சம் நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தந்தை-மகன் கைது
பெங்களூரு மத்திய மண்டலத்தில் அடிக்கடி சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனமரம் கடத்தல் தொடர்பாக இம்மாத்உல்லா (வயது 26), முஜாயித்உல்லா (24), லட்சுமணா (32), ரங்கநாதன் (35), ராமசாமி (40) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் சந்தனமரம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கட்டிகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சையத் ரியாஸ் (49), அவருடைய மகன் சையத் அலி என்ற பாபா (28) ஆகியோரை கைது செய்தோம். இவர்களிடம் இருந்து ரூ.10½ லட்சம் மதிப் பிலான 350 கிராம் தங்கநகைகள், ரூ.35 லட்சம் ரொக்கம், 9 கிலோ சந்தனமரக்கட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன உதவி
இவர்கள் சந்தனமரக்கட்டைகள் கடத்தும் கும்பலுக்கு பணம் கொடுப்பதோடு, போலியான பதிவெண்கள் பொருத்தி வாகனங்களை கொடுத்து வந்தது தெரியவந்தது. சந்தனமரங்களை வெட்டி கடத்த இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்தியதோடு, இவ்வாறு கடத்தும் சந்தமரக்கட்டைகள் சையத் ரியாஸ், சையத் அலி ஆகியோர் வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ள பழைய வாகனங்களின் பதிவெண்களை பார்த்துவிட்டு, அந்த எண்களில் போலி பதிவெண் பலகைகள் தயாரித்து கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
சையத் ரியாஸ், சையத் அலி ஆகியோரை கைது செய்ய கட்டிகேனஹள்ளிக்கு சென்ற போது அந்த கிராம மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால், தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் அவர்களின் வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியை கோர்ட்டில் இருந்து பெற்றோம். இதைத்தொடர்ந்து, எனது தலைமையிலும், ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத் தலைமையிலும் 2 தனிப்படைகளாக 200 போலீசார் சென்று இன்று (அதாவது நேற்று) அதிகாலையில் அவர்கள் 2 பேரையும் கைது செய்தோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story