கொப்பல் அருகே சோகம் மனைவி-4 மகள்களுடன் விவசாயி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை


கொப்பல் அருகே சோகம் மனைவி-4 மகள்களுடன் விவசாயி தற்கொலை காரணம் என்ன? போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 6 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

கொப்பல் அருகே மனைவி-4 மகள்களுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொப்பல், 

கொப்பல் அருகே மனைவி-4 மகள்களுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

கொப்பல் மாவட்டம் மீடகல் கிராமத்தை சேர்ந்தவர் சேகரய்யா (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி ஜெயம்மா (39). இந்த தம்பதிக்கு பசம்மா (23), கவுரம்மா (20), சாவித்திரி (18), பார்வதி (16) என்ற 4 மகள்கள் இருந்தனர்.

இதில் பசம்மா, கவுரம்மா ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்டது. சாவித்திரிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. சாவித்திரியின் திருமணத்துக்காக சேகரய்யா கிராமத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி இருந்தார்.

பிணமாக கிடந்தனர்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சேகரய்யா தனது மனைவி, 4 மகள்களுடன் வீட்டு கதவை அடைத்து கொண்டு வீட்டில் தூங்கினார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆனபோதிலும் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த பகுதியில் இருந்தவர்கள் வீட்டு கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை.

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது வீட்டு உள்ளே சேகரய்யாவின் மனைவி, 4 மகள்கள் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். சேகரய்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து உடனடியாக கொப்பல் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டு கதவை உடைத்து உள்ளே போய் பார்த்தனர்.

உடல்கள் மீட்பு

அப்போது, தூக்கில் பிணமாக தொங்கிய சேகரய்யா, பிணமாக கிடந்த அவருடைய மனைவி ஜெயம்மா, மகள்கள் பசம்மா, கவுரம்மா, சாவித்திரி, பார்வதி ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டனர்.

சம்பவ இடத்துக்கு கொப்பல் போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர், 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொப்பல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனைவி-மகள்களுடன் விவசாயி தற்கொலை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேகரய்யா தனது குடும்பத்துடன் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது அவரது மனைவி ஜெயம்மா, 4 மகள்களும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் சேகரய்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரேணுகா கூறுகையில், ‘சேகரய்யா தனது மனைவி, 4 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. சேகரய்யாவின் மனைவி, 4 மகள்கள் சமையல் அறையில் பிணமாக கிடந்தனர். அதன் அருகே சேகரய்யா தூக்கில் பிணமாக தொங்கினார். பிரேத பரிசோதனை முடிவில் தான் எந்த வகையான விஷம் அவர்களின் உயிர்களை பறித்தது என்பது பற்றி தெரியவரும். தற்கொலைக்கு சரியான காரணம் தெரியவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

காரணம் என்ன?

மேலும், சேகரய்யாவின் இந்த துயர முடிவுக்கு காரணமாக சில விஷயங்கள் கூறப்படுகின்றன. அதாவது சேகரய்யா விவசாயம் மற்றும் 3-வது மகள் திருமணத்துக்காக ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. சேகரய்யாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் இடைேய பிரச்சினை இருப்பதும், விவசாய நிலத்தை அளந்து கொடுக்க அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, திருமணம் ஆன 2 மகள்களுக்கும் அவர்களின் கணவர்களுக்கும் இடையே பிரச்சினை இருப்பதும், இதனால் 2 மகள்களும் சேகரய்யாவின் வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதுபோன்ற பிரச்சினைகளால் மனம் உடைந்த சேகரய்யா தனது குடும்பத்தினருடன் இந்த துயர முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுதொடர்பாக கொப்பல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மந்திரி ஆறுதல்

மேலும், சம்பவம் குறித்து அறிந்தவுடன் விவசாயத்துறை மந்திரி சிவசங்கர ரெட்டி மீடகல் கிராமத்துக்கு சென்று சேகரய்யாவின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அவர் கூறுகையில், ‘6 பேர் தற்கொலை செய்தது மனதை உருக்கும் துக்க சம்பவம். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பார்கள்’ என்றார்.

இந்த சம்பவம் நேற்று மீடகல் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story