காதல் திருமணம் செய்த வாலிபர் மர்ம சாவு - ஆணவ கொலை என்று கூறி பெண்ணாடத்தில் உறவினர்கள் மறியல்


காதல் திருமணம் செய்த வாலிபர் மர்ம சாவு - ஆணவ கொலை என்று கூறி பெண்ணாடத்தில் உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:30 PM GMT (Updated: 5 Jan 2019 11:30 PM GMT)

காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். அவரை ஆணவ கொலை செய்ததாக கூறி பெண்ணாடத்தில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெண்ணாடம்,

காதல் திருமணம் செய்த வாலிபர் திடீரென மர்மமான முறையில் இறந்தார். அவரை ஆணவ கொலை செய்ததாக கூறி பெண்ணாடத்தில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி மகன் பரந்தாமன்(வயது 25). இவர் கேரளாவில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பரந்தாமன், மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து அந்த இளம்பெண்ணின் பெற்றோர் மதுரை சிந்துப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ததாக பரந்தாமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு மதுரை கிளை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி வரை மதுரையில் தங்கி, சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் பரந்தாமன் கடந்த மாதம் 25-ந்தேதி வெளியே வந்தார். தொடர்ந்து அவர் மதுரையில் தங்கி தினமும் சிந்துப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட்டு வந்தார்.

இந்த நிலையில் கடைசி நாளான 3-ந்தேதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு பரந்தாமன் வீட்டிற்கு வருவதாக பெற்றோரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இறையூரில் உள்ள பரந்தாமனின் பெற்றோருக்கு நேற்றுமுன்தினம் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய புனே போலீசார், உங்கள் மகன் பரந்தாமன் இங்குள்ள (புனே) தங்கும் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக தெரிவித்தனர். இதனால் பரந்தாமனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பரந்தாமன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை ஆணவ கொலை செய்ததாக கூறி நேற்று திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் இறையூர் ரெயில்வே மேம்பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களில் சிலர் வாயில் கருப்பு துணிக்கட்டி கலந்து கொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி தாசில்தார் கண்ணன், மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பரந்தாமனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கூறினர். அதில், கடந்த 3-ந்தேதி எங்கள் மகன், மதுரையில் இருந்து செல்போனில் பேசினான். அப்போது, போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டேன், ஊருக்கு வருகிறேன் என்று கூறினான். இந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) புனேயில் தற்கொலை செய்து விட்டதாக அங்கிருந்து தகவல் வருகிறது. ஒரே நாளில் மதுரையில் இருந்து புனேவிற்கு சென்று எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும். எனது மகனை ஆணவ கொலை செய்துவிட்டார்கள். எனவே பரந்தாமன் இறப்பிற்கு இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தான் காரணம், அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதை கேட்ட போலீசார், இதுதொடர்பாக புகார் கொடுங்கள். அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையேற்ற பரந்தாமனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story