டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதிகளில் கூலி உயர்வு கேட்டு, விசைத்தறி தொழிலாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்


டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதிகளில் கூலி உயர்வு கேட்டு, விசைத்தறி தொழிலாளர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2019 5:14 AM IST (Updated: 6 Jan 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதிகளில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக தொடர்ந்து நீடித்தது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் விசைத்தறி தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் செயல்படும் விசைத்தறி கூடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினசரி கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் தினசரி சம்பளம் குறித்து விசைத்தறி கூடங்களின் உரிமையாளர்கள்-தொழிலாளர்கள் இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2016-ம் ஆண்டு போடப்பட்ட சம்பள ஒப்பந்தம் தற்போது முடிவடைந்துள்ளது.

எனவே சம்பள உயர்வு குறித்து புதிய ஒப்பந்தம் போட வேண்டும் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் புதிய சம்பள ஒப்பந்தம் போட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கடந்த 1-ந்தேதி முதல் 50 சதவீத சம்பள உயர்வு, 20 சதவீத போனஸ் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை விசைத்தறி தொழிலாளர்கள் தொடங்கினர். நேற்று இந்த போராட்டம் 5-வது நாளாக நீடித்தது.

இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவை தெரிவித்து உள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள்-தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதன்பின்னர் திண்டுக்கல் தொழிலாளர் நலவாரிய ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விசைத்தறி கூடங்களின் உரிமையாளர்கள் தரப்பில் யாரும் பங்கேற்காத நிலையில், இப்பிரச்சினைக்கு முடிவு எட்டவில்லை.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் விசைத்தறி தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இப்பிரச்சினையில் அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி பகுதிகளில் விசைத்தறி கூடங்களில் தயார் செய்யப்படும் காட்டன் சேலை மற்றும் வேட்டிகளின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story