திருவள்ளூர் மாவட்டத்தில் 5½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 5½ லட்சம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:15 PM GMT (Updated: 6 Jan 2019 4:37 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 300 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டுடன் தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவை ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 5 லட்சத்து 58 ஆயிரத்து 300 ரேஷன்கார்டுதார்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தொடங்கி பொங்கலுக்கு முன்னர் அனைவருக்கும் முழுமையாக வழங்கி முடிக்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் ரேஷன்கடைகள் காலை 8½ மணி முதல் நண்பகல் 12½ மணி வரையிலும், பிற்பகல் 1½ மணி முதல் மாலை 5½ மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.1000 வழங்குவதற்கு மின்னணு குடும்பஅட்டை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளின் விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்யப்படும். மின்னணு குடும்ப அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கார்டில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவு சொல் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவு தாளில் குறிப்பிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story