திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்


திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 6 Jan 2019 10:29 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

நன்னிலம்,


திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலுக்கு நேற்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தனது குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் எமதர்மர் சன்னதியில் விளக்கு ஏற்றி வழிபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். அ.தி.மு.க. திருவாரூர் இடைத்தேர்தலை கண்டு அஞ்சுகிறதா? என்று கேட்டதற்கு அ.தி.மு.க. எப்போதும் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு தான் அறிவிப்பது வழக்கம். வருகிற 10–ந்தேதி வேட்பு மனு தாக்கல் கடைசி நாளன்று அறிவிப்பார்கள். நேற்றுமுன்தினம் நேர்காணல் நடந்துள்ளது.


அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் அறிவிப்பதாக சொல்லியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.


நாடாளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று கேட்டதற்கு இது சபாநாயகர் எடுத்த முடிவு. நான் துணை சபாநாயகர் அது பற்றி கருத்து சொல்வது சரியில்லை என்றார்.

ராகுல்காந்தி ரபேல் விவகாரம் குறித்து பேசும்போது பா.ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு நாடகம் ஆடுவதாக சொன்னார். நாங்கள் குளிர்கால கூட்ட தொடர் தொடங்கிய நாள் முதல் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் குரல் கொடுப்பதை பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சியும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் பா.ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தான் ரபேல் விவகாரம் குறித்து பேசி நாடகம் ஆடுகிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை குறித்து விரைவில் கவர்னர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story