அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்


அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:15 PM GMT (Updated: 6 Jan 2019 6:43 PM GMT)

அந்தியூர் அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்தது.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வீட்டின் அருகே உள்ளது. தற்போது தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் வாழைகளை பயிரிட்டு உள்ளார். 10 மாத பயிரான வாழைகள் சாகுபடிக்கு தயாரான நிலையில் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் அந்தியூர் வனப்பகுதியில் இருந்து யானை ஒன்று வெளியேறியது. இந்த யானை நேற்று அதிகாலை 3 மணி அளவில் ராஜாமணியின் தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழைகளை தின்றும் காலால் மிதித்தும் நாசம் செய்து கொண்டு இருந்தது. யானையின் பிளிறல் சத்தம் மற்றும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்து ராஜாமணி வெளியே வந்து பார்த்தார்.

அப்போது தோட்டத்தில் ஒற்றை யானை அட்டகாசம் செய்வதை பார்த்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தும் விவசாயிகள் அங்கு சென்று தீப்பந்தங்கள் காட்டியும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் ஆவேசமடைந்த யானை விவசாயிகளை விரட்டியது. நேற்று அதிகாலை 6 மணி அளவில் அந்த யானை தானாகவே வனப்பகுதிக்குள் சென்றது. தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததில் 500–க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் வனத்துறையினர் யானை சேதப்படுத்திய தோட்டத்துக்கு சென்று வாழைகளை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்று ராஜாமணியிடம் கூறினார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களாக ஒற்றை யானை ஒன்று தோட்டத்துக்குள் புகுந்து வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே வாழைகளை இழந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், அகழி அமைத்து யானைகள் கிராமத்துக்குள் நுழையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story