முத்துப்பேட்டை அருகே, எச்சில் துப்பியதால் தகராறு: அரசு பஸ் கண்டக்டருக்கு கத்திக்குத்து


முத்துப்பேட்டை அருகே, எச்சில் துப்பியதால் தகராறு: அரசு பஸ் கண்டக்டருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 7 Jan 2019 3:45 AM IST (Updated: 7 Jan 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே எச்சில் துப்பியதால் ஏற்பட்ட தகராறில் அரசு பஸ் கண்டக்டரை கத்தியால் குத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஆரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 34). இவர் முத்துப்பேட்டை ஒன்றிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாண்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெடும்பலம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த திருத்துறைப்பூண்டி டெப்போ அரசு பஸ் கண்டக்டர் சாமிநாதன்(43) என்பவரும் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாமிநாதன் எச்சில் துப்பினார். அந்த எச்சில் வினோத்குமார் மீது பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாமிநாதன் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனே திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் வினோத்குமாரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story