மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை அறிந்து மாணவர்கள் செயல்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை அறிந்து மாணவர்கள் எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என சங்கரன்கோவிலில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் போட்டி பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சங்கரன்கோவில்,
மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை அறிந்து மாணவர்கள் எதிர்காலத்தில் செயல்பட வேண்டும் என சங்கரன்கோவிலில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் போட்டி பரிசளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா போட்டி
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் தோறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கவிதை போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறும் 2 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் நடந்தது. நடுவர்களாக கோபி செழியன் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை விஜயா உள்ளிட்ட 6 பேர் பொறுப்பு வகித்தனர்.
முதல் 3 இடங்கள்
பேச்சு போட்டியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நர்மதா முதல் இடத்தையும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கஸ்தூரி 2-ம் இடத்தையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த மயாஷ் அகமது 3-வது இடத்தையும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் முதலிடத்தையும், புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த வர்ஷா 2-ம் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த புவனகிரி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
கவிதை போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தேவஸ்ரீ முதலிடத்தையும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுபைதா 2-ம் இடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லோகேஷ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா சங்கரன்கோவிலில் நேற்று காலை நடந்தது. தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இளைஞர் அணி மாநாட்டின் தீர்மானம்
நெல்லையில் நடந்த இளைஞர் அணி மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளை நிதியை முன் வைப்புத்தொகையாக வைத்து பரிசு வழங்கி வருகிறோம். மாவட்ட, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 10 மாணவர்களுக்கு தலா ரூ.1000 ஆறுதல் பரிசு வழங்கி வருகிறோம். மாநில அளவில் முதல் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கி வருகிறோம்.
கடந்த 11 ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி வருகிறோம். இதுவரை 16 ஆயிரத்து 146 மாணவர்களுக்கு, ரூ.3 கோடியே 60 லட்சம் பரிசுகள் வழங்கி இருக்கிறோம். அதுபோல கலைஞர் பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கி வருகிறோம். இதுவரை மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 79 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.7¼ கோடி பரிசு
இதுவரை பேரறிஞர் அண்ணா, கலைஞர் பிறந்தநாள் போட்டியில் மொத்தம் 21 ஆயிரத்து 3 மாணவர்களுக்கு, ரூ.7 கோடியே 40 லட்சத்து 21 ஆயிரத்து 500 பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை தலைவர் நான் என்ற முறையில், உங்களுக்கு நான் பரிசு வழங்கி வருகிறேன். இங்கு பேசியவர்கள் கூறினார்கள். நான் கடந்த முறை செயல் தலைவராக வந்தேன், தற்போது தி.மு.க. தலைவராக வந்திருக்கிறேன், அடுத்தமுறை முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று கூறினார்கள்.
நான் உங்களோடு ஒருவனாக இருந்து பனியாற்ற விரும்புகிறேன். தி.மு.க.வில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி உள்பட பல்வேறு அணிகள் இருக்கின்றன. அனைத்துக்கும் முதல் அணி இளைஞர் அணி. ஏன் இன்னும் சொல்லப்போனால் கழகத்துக்கு இதய அணியே இளைஞர் அணிதான்.
படிப்படியாக...
நான் படிப்படியாக வளர்ந்தவன். மாணவரணி, இளைஞர் அணி, பொருளாளர், செயல் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த பிறகு தான் தி.மு.க. தலைவராக உள்ளேன். நீங்களும் படிப்படியாக படித்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டும். அண்ணா, கலைஞரை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த போட்டிகள் நடந்து வருகிறது. மாணவர்கள் நன்றாகவே தலைவர்களை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் அரசியல் பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். எங்களை விட மாணவர்கள் அதிக அளவில் அரசியல் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். தற்போது மத்திய, மாநில அரசுகள் எந்த அளவு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். அதை அறிந்து புரிந்து கொண்டு எதிர்காலத்தில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
மாணவர்களுடன் செல்பி
முன்னதாக அவர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுடன் குரூப் புகைப்படம் எடுத்து கொண்டார். பரிசு வாங்கும்போது சில மாணவ-மாணவிகள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
விழாவில் தொழில் அதிபர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில், மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், முன்னாள் எம்.பி. சுகவனம், எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், பூங்கோதை, லட்சுமணன், அன்பில் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன் (நெல்லை கிழக்கு) அப்துல் வகாப் (மத்திய மாவட்டம்), தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, ராதாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story