உயர்மின்கோபுர பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்; கொ.ம.க.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு


உயர்மின்கோபுர பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்; கொ.ம.க.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 4:30 AM IST (Updated: 7 Jan 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

உயர்மின்கோபுர பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

அவினாசி,

திருப்பூர் வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் அவினாசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, செல்வராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொ.ம.தே.க. மாநில பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசியதாவது:–

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணனை கொ.ம.தே.க. ஆதரிக்கிறது. தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற கொ.ம.தே.க. முழுவீச்சில் தேர்தல் பணியாற்றும். மதுரை விமானநிலையத்துக்கு முத்துராமலிங்கதேவர் பெயர் சூட்ட இருப்பதை அறிகின்றோம். இதே போல கோவை விமான நிலையத்துக்கு கொங்கு நாட்டின் ஒப்பற்ற சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டும் என கொ.ம.தே.க. சார்பில் கேட்டு கொள்கிறோம்.

தொழில் வளர்ச்சிக்காக கோவையில் இருந்து துபாய்க்கு நேரடியாக விமான சேவையை ஏற்படுத்த வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையில் அத்திக்கடவு திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளதற்கு கொ.ம.தே.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.உயர்மின் கோபுர பிரச்சினையில் போராடி வருகின்ற போராட்ட குழுவினரை அரசு அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விவரம் வருமாறு:–

அத்திக்கடவு–அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது, பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story