திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா பேட்டி
திருவாரூர் இடைத்தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று த.மா.கா.மாநில இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கூறினார்.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் முத்தூரில் த.மா.கா.மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் புயல் பாதிப்பில் இருந்து இன்னமும் மீளவில்லை. மேலும் புயல் நிவாரண பணிகளும் முற்றிலும் முடியவில்லை. இதனால் வருகிற 28–ந் தேதி நடைபெற உள்ள திருவாரூர் இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்பது த.மா.காவின் நிலைப்பாடாகும்.
இதற்கு உதாரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கூறலாம். இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அதிகார, பண பலத்துடனும், மற்ற எதிர்க்கட்சிகள் அதற்கு ஈடு கொடுத்து மோதுவதற்கும் தயாராகி வருகின்றன. எனவே இந்த இடைத்தேர்தல் மக்கள் நலனுக்கு எதிரானதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே வருகிற மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள மற்ற 19 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்திட ஏதுவாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் இடைத்தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஆனாலும் தற்போதுள்ள நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் அங்கு த.மா.கா போட்டியிடுமா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்குமா? என்பதை த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உரிய நேரத்தில் இறுதி முடிவு செய்து அறிவிப்பார். மேலும் கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை என்ற பெயரில் மிகப்பெரிய அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இங்கு முதலில் சென்று பார்வையிட்டு அணை கட்டும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது என்ற தகவலை முதலில் வெளிக்கொண்டு வந்தது த.மா.கா. இளைஞர் அணி தான். மேலும் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் மேட்டூர் ஆணை நீரின்றி காய்ந்து காட்சி பொருளாக மாறிவிடும். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் கொண்டு சென்றால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே இதற்காக போராடி வரும் விவசாயிகளை தமிழக முதல்–அமைச்சர் சந்தித்து இந்த திட்டத்தை கைவிட உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.