கிணத்துக்கடவு பகுதியில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 6 ஆட்டோக்கள் பறிமுதல்
கிணத்துக்கடவு பகுதியில் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 6 ஆட்டோக்களை பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர்.
கிணத்துக்கடவு,
கிணத்துக்கடவு, நெகமம், வடசித்தூர் பகுதிகளில் பயணிகள் ஆட்டோக்கள் தகுதிச்சான்று இன்றி இயக்கப்படுவதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு புகார் வந்தது. இதனையடுத்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி சிவகுருநாதன் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முனுசாமி, செல்வதீபா ஆகியோர் கிணத்துக்கடவு, நெகமம், வடசித்தூர் ஆகிய பகுதிகளில் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிணத்துக்கடவு பகுதியில் தகுதிச்சான்றை புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களை அதிகாரிகள் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதேபோல் நெகமம் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமல் இயக்கப்பட்ட 3 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி கூறியதாவது:-
கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் இருந்து வரப்பட்ட புகாரின் பேரில் வாகன சோதனை நடத்தியதில் 6 ஆட்டோக்கள் தகுதிச்சான்றை புதுப்பிக்காமல் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து இந்த பகுதிகளில் வாகனங்கள் கண்காணிக்கப்படும். தகுதிச்சான்று புதுப்பிக்காமல் வாகனத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story