அனைத்து துறைகளிலும் தோல்வி: நிர்வாக சீர்கேட்டில் அரசு சிக்கித் தவிக்கிறது; அ.தி.மு.க. குற்றச்சாட்டு


அனைத்து துறைகளிலும் தோல்வி: நிர்வாக சீர்கேட்டில் அரசு சிக்கித் தவிக்கிறது; அ.தி.மு.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jan 2019 5:30 AM IST (Updated: 7 Jan 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து அரசு நிர்வாக சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

அரசியல் ரீதியாக பின்னடைவு ஏற்படும் போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை சம்பந்தமாக அனைத்துக்கட்சி கூட்டம் என்ற பெயரில் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஒளிந்துகொள்வது வாடிக்கை. அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது. இப்போது மாநில அந்தஸ்து பிரச்சினையை கையில் எடுத்து தனது பொறுப்பில் இருந்து நழுவ பார்க்கிறார்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் பிரதமருக்கு நெருக்கமாக இருந்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் மாநில அந்தஸ்தை பெற்று தந்திருக்கலாம். ஆனால் அப்போது முதல்–அமைச்சராக இருந்த ரங்கசாமி மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியபோது இவர் சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு குழப்பம் ஏற்படுத்தினார்.

மத்திய அரசின் ஆட்சிக்காலம் இன்னும் 3 மாதம்தான் என்ற நிலையில் மாநில அந்தஸ்து கேட்டு போராடுவது என்பது மக்களை ஏமாற்றும் செயல். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று தந்தார் ஜெயலலிதா. ஆனால் அதன்பின் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தில் காங்கிரஸ் அரசு முழுமையாக அதை கிடப்பில் போட்டுவிட்டது. இப்போது கவர்னர் கிரண்பெடியை எதிர்க்க முடியாத முதல்–அமைச்சர் நாராயணசாமி மாநில அந்தஸ்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்.

புதுவையில் 3.40 லட்சம் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு இலவச பொங்கல் பொருட்கள் வழங்க முடியாது என்று கூறுவது எதேச்சதிகார போக்கினை காட்டுகிறது. இதற்காக கவர்னரும், முதல்–அமைச்சரும் சண்டைபோடுவது கேவலமானது.

புதுவையில் பல மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை. தற்போது பொங்கல் பொருட்களும் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழக அரசு பொங்கலுக்கு மக்களுக்கு இலவசங்களை அறிவித்துள்ள நிலையில் புதுவையிலும் அதற்கு நிகராக ஒவ்வொரு ரே‌ஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கவேண்டும்.

போராட்டம் நடத்தி வரும் மின்துறை ஊழியர்களை அழைத்து கோரிக்கைகளை ஏற்பது குறித்து தெரிவிக்கலாம். இதனால் இதனால் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடாது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story