மின்துறை ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்; வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
மின்துறை ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்று வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு அன்றாட நடவடிக்கைகள், அத்தியாவசிய பணிகளை கூட செய்ய இயலாமல் உள்ளது. இந்தநிலையில் மின்துறை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட முன்வந்தபோது அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் பலமுறை ஒத்திவைத்தனர். ஆனால் அதன்பிறகும் அரசு அலட்சியமாக நடந்துகொண்டது. இதனால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு மின்துறை ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் பிளஸ்–2, மார்ச் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லாவிட்டால் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முத்தியால்பேட்டை வன்னியர் வீதியில் திடீரென மின்சார வினியோகம் தடைபட்டது. இதனால் சுமார் 200 வீடுகள் இருளில் மூழ்கின. இளநிலை பொறியாளர் வந்து சீரமைப்பு பணியை மேற்கொண்டார். சுமார் 8 மணி நேரத்திற்கு பின் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மின்தடை ஏற்பட்டால் அவர்கள் நேரடியாக வீதியில் இறங்கி போராட தூண்டுவதாக அமையும். எனவே மின்துறை ஊழியர்களை உடனடியாக அழைத்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.