‘கஜா’ புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா


‘கஜா’ புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 8:04 PM GMT)

‘கஜா’ புயல் நிவாரணபணிகளில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

பெரம்பலூர்,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வருவாய்த்துறை, மின்வாரியத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, செய்தித்துறை, நகராட்சி, பேரூராட்சி, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி முகமை, தீயணைப்பு துறை, மாவட்ட வனத்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 524 அரசு ஊழியர்கள் சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்று ‘கஜா’ புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட 524 அரசு ஊழியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பாராட்டு விழா பெரம்பலூரில் நேற்று நடத்தப்பட்டது.

விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், மருதராஜா எம்.பி. ஆகியோர் ‘கஜா’ புயல் நிவாரண பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அரசு ஊழியர்களை பொன்னாடை போர்த்தி கவுரவித்து, இனிப்புகள் வழங்கி பாராட்டினர். தொடர்ந்து அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் எஸ்தர்ஷீலா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சக்திவேல், நகராட்சி ஆணையர் வினோத் ஆகியோர் ‘கஜா’ புயல் நிவாரணபணிகளை சிறப்பாக மேற்கொண்ட அரசு ஊழியர்களை வாழ்த்தி பேசினர்.

முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன் நன்றி கூறினார். 

Next Story