அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும் ஏ.ஐ.டியு.சி. வலியுறுத்தல்
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை,
அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி. கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தொழிற்சங்க கூட்டம்
நெல்லை டவுனில் உள்ள வங்கி ஊழியர் சங்க அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சம்மேளன பொதுச்செயலாளர் லட்சுமணன் சங்க கொடியேற்றினார். துணை பொதுச்செயலாளர் சுடலைமுத்து வரவேற்றார். ஆறுமுகம் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பொதுச்செயலாளர் உலகநாதன் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். பொருளாளர் குருசாமி வரவு- செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தலைமை குழு உறுப்பினர்கள் சித்தனாதன், நீராவி, ராஜமுத்து, கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பணி நிரந்தரம்
சேமநல ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என்பதை கைவிட வேண்டும். 240 நாட்கள் வேலை செய்தவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். நடத்துனர் இல்லாத பஸ்களை நிறுத்த வேண்டும். பஸ் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் தேவைக்கு ஏற்ற பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஓய்வூதியம்
பணிமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும். ஊதியத்துக்கு ஏற்ப பயணப்படி வழங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மணிகண்டன் நன்றி கூறினார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சடையப்பன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story