என்.எல்.சி. 3-வது சுரங்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படும்


என்.எல்.சி. 3-வது சுரங்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படும்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:45 PM GMT (Updated: 6 Jan 2019 8:20 PM GMT)

என்.எல்.சி. 3-வது சுரங்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படும் என்று கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார். தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர்,

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடக்க இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஊக்கம் அளித்து வருகிறோம். முதலீட்டாளர்கள் எவ்வளவு தொகை போட்டு முதலீடு செய்கிறார்கள், அந்த நிறுவனத்தில் எவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள் என்பதை ஆய்வு செய்து, அதற்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்படும்.

மின்சாரம் இலவசமாக வழங்குகிறோம். பன்னாட்டு நிறுவனத்தில் பயிற்சி காலத்தில் வேலை செய்வதற்கு 6 மாத கால ஊக்க நிதியை தமிழக அரசு ஒதுக்குகிறது. இது போன்ற சூழ்நிலை குஜராத், பீகார், ஒடிசா, மராட்டியம் போன்ற பிற மாநிலங்களில் இல்லை.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 3-வது சுரங்கப்பணிக்கு நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது அரசின் கவனத்தில் உள்ளது. அவர்களுக்கு மாற்றுகுடியிருப்பும் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது பற்றி கனிமவளத்துறை செயலாளர், தலைமை செயலாளர், முதல்-அமைச்சர் ஆகியோருடன் என்.எல்.சி. தலைவரை சந்தித்து பேச வலியுறுத்தி இருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றால், இதற்கு நல்ல தீர்வு ஏற்படும்.

ஜெயங்கொண்டத்தில் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடவில்லை. 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசிடம் உள்ளது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ஒரு லாபகரமான பொதுத்துறை நிறுவனம். அந்த நிறுவனத்தின் லாபத்தை தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்தில் முதலீடு செய்ய அனுமதிக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

Next Story