வேலைவாய்ப்பிற்கு காத்திருக்காமல் மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும்


வேலைவாய்ப்பிற்கு காத்திருக்காமல் மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும்
x
தினத்தந்தி 6 Jan 2019 10:30 PM GMT (Updated: 6 Jan 2019 8:25 PM GMT)

வேலை வாய்ப்பிற்கு காத்திருக்காமல் மாணவர்கள் தொழில்முனைவோராக வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் 22-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் வள்ளியப்பன் முன்னிலை வகித்தார். கல்லூரி செயலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் பரசுராமன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, இளநிலையில் 865 பேர், முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் 336 பேர் என மொத்தம் 1,201 பேருக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல் தரம் பெற்றவர்கள், பல்கலைக்கழகத்தின் தரத்தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், தரச்சான்றிதழ்களையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

சிறந்த சுயநிதி கல்லூரிகளுள் ஜெ.ஜெ. கல்லூரியும் ஒன்றாக திகழ்கிறது. கல்வி கற்பித்தலுக்கு தேவையான சிறந்த ஆய்வகங்களையும், துறை தேர்ந்த ஆசிரியர்களையும், மேலான சுற்றுச்சூழலையும் கொண்டு 25 ஆண்டுகள் கல்விப்பணி ஆற்றி வெள்ளி விழா கண்டுள்ள இந்த கல்லூரியை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

பட்டம் பெறும் மாணவர்கள் இந்த பட்டங்களை பெற்று தருவதற்காக அயராது உழைத்த பெற்றோர்களை நினைவு கூற வேண்டியது தலையாய கடமையாகும். அத்துடன் ஆசிரியர்களையும் போற்றுதல் வேண்டும். பட்டம் பெறும் மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு எதிர்பார்த்து காத்திருக்காமல், நீங்களே தொழில்முனைவோர்களாக உருவாகி வளர்ந்திட வேண்டும். உங்களின் கனவுகள் நாளைய நிகழ்வுகளாக மாறிடும் வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story