ராமேசுவரம் வளர்ச்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்


ராமேசுவரம் வளர்ச்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 Jan 2019 4:45 AM IST (Updated: 7 Jan 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் தீவு வளர்ச்சிக்கு அனைத்து அமைப்புகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் வீரராகவ ராவ் கேட்டுக்கொண்டார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவு வளர்ச்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக ராமேசுவரத்தில் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- ராமேசுவரத்துக்கு ஆண்டுதோறும் சுமார் 1 கோடி சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. இதனால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. ராமேசுவரம் தீவு பகுதியை மேம்படுத்துவதற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் நிலவும் குறைபாடுகளை மாவட்ட நிர்வாகமோ, திருக்கோவில் நிர்வாகமோ மட்டும் சீர்செய்ய முடியாது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இங்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மனநிறைவுடன் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட வாடகையை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பாலிதீன் ஒழிப்பிலும் ஆட்டோ ஓட்டுனர்களின் பங்கு இருக்க வேண்டும். இதேபோல அனைத்து மக்களும் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். கோவில் நிர்வாகத்துடன் யாத்திரை பணியாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும். தீர்த்தமாடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பக்தர்களிடம் பெற்றுக்கொள்ள வேண்டும். பணியின் போது அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். மேலும் சீருடை அணிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றம் பக்தர்களிடம் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்காத அளவில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி பேசும்போது, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தீர்த்த கிணறுகள் ஆகம விதிப்படி மாற்றியமைக்கப்பட்டு வடக்கு கோபுரம் வழியாக பக்தர்களை அனுமதித்தோம். கூட்டம் அதிகளவில் இருந்ததால் வடக்கு வாசல் வழியாக சென்று தீர்த்தமாடும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு வேலிகள் விரைவில் அமைக்கப்படும். யாத்திரை பணியாளர்கள் பக்தர்களை குறுக்கு வழியில் அழைத்து வந்து தீர்த்தமாட செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் பேசும்போது, ஆட்டோக்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். ரத வீதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக கீழரதவிதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவரும் அங்குதான் நிறுத்த வேண்டும். பக்தர்கள் தீர்த்தமாட செல்லும் வடக்கு வாசலில் எக்காரணம் கொண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தக்கூடாது. திட்டக்குடியில் இருந்து கோவில் போலீஸ் நிலையம், நகராட்சி, மருதுபாண்டியர் சிலை செல்லும் பகுதிகளில் ஆட்டோக்கள், கார், மற்றும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆட்டோ உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது அதிகாரிகள் குறிப்பிடும் கட்டணம் கடந்த 2014-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டதாகும். இன்றைய காலகட்டத்தில் உதிரி பாகங்களின் விலை, காப்பீட்டு தொகை போன்றவை பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனை கருத்தில் கொண்டு வாடகை கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும் ராமேசுவரம் பகுதியில் பெர்மிட் இல்லாத ஆட்டோக்கள் பெருமளவில் இயங்கி வருகிறது. அவற்றை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ராமேசுவரம் நகரில் இயங்கும் அனைத்து பஸ்களும் பழுதடைந்து விட்டன. எனவே இவற்றை நிறுத்திவிட்டு நகருக்குள் எளிதாக சென்று வரும் வகையில் புதிதாக மினி பஸ்களை இயக்க வேண்டும். இதேபோல நகர் முழுவதும் ஆங்காங்கே பழைய மின் கம்பங்கள் கிடக்கின்றன. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கடற்கரை சாலையை விரைவில் அமைக்கவேண்டும். தெருக்களின் உட்புறத்தில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

அகில இந்திய யாத்திரை பணியாளர்கள், ஒவ்வொரு தீர்த்தம் உள்ள பகுதியிலும் மேற்கூரை அமைக்க வேண்டும். எங்களது வாளிகளை வைக்க இடம் ஒதுக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கோட்டாட்சியர் சுமன், திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், மாவட்ட சுற்றுலா அதிகாரி மருதுபாண்டி, கோவில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் முருகேசன் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும், அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் காளிதாஸ், ராமேசுவரம் வர்த்தக சங்க துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ரவீந்திரன், மார்க்கெட் வர்த்தக சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் யோகராஜன், தங்கச்சிமடம் வர்த்தக சங்க தலைவர் நிஜாமுதீன், செயலாளர் வல்லபை கணேசன், ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆட்டோ சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செந்தில், நிர்வாகி சி.ஆர்.செந்தில் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Next Story