வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்க தனி சட்டம் இயற்றக்கோரி கோட்டையை நோக்கி பேரணி


வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்க தனி சட்டம் இயற்றக்கோரி கோட்டையை நோக்கி பேரணி
x
தினத்தந்தி 6 Jan 2019 10:45 PM GMT (Updated: 6 Jan 2019 8:27 PM GMT)

வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்க தனி சட்டம் இயற்றக்கோரி சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி, 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகே உள்ள வினோத் அரங்கில் நடைபெற்றது. இதற்கு நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், அண்மை காலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் குடியேறுவது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகையில் 88 லட்சம் பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இது, வருங்காலத்தில் தமிழர் ஆட்சி அமைய தடையாக இருக்க கூடும். எனவே இங்கு வெளிமாநிலத்தவரை கண்காணிக்கும் சட்ட நடைமுறையை தமிழக அரசு வகுக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு வாக்குரிமை, குடும்ப அட்டை போன்றவை வழங்காமல், அவர்களது சொந்த மாநிலங்களிலேயே வைத்துக்கொள்ள வகை செய்ய வேண்டும் என செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் தொழில் வணிகம் வடநாட்டினர் கையிலேயே சிக்கி உள்ளது. பிற மாநிலங்களில் வெளிமாநிலத்தவர்கள் தொழில் வணிகம் நடத்த அரசு வரம்பு விதித்துள்ளது. அதுபோல் தமிழக அரசும் வரம்பு விதிக்க வேண்டும். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தி வைத்துவிட்டு, புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை செய்த பிறகே தேர்தலை நடத்திட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர், வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வட மாநிலத்தவர் அதிகமாக குடியேறி இருப்பதால், தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பறிபோகிறது. இந்த நிலையை போக்க இங்குள்ள மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழர்களுக்கு 90 சதவீத பணியிடங்களை வழங்கவும், அதேபோல் தமிழக அரசின் நிறுவனங்கள், அரசு சார்பு கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இதற்கென தமிழக அரசு சட்டம் இயற்றிட வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தோழமை கட்சிகளை ஒன்று திரட்டி அடுத்த மாதம்(பிப்ரவரி) சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்பட்டு, அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க அங்கு செயல்படும் சிமெண்டு ஆலைகளை மூடக்கோரி அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

என்.எல்.சி.யில் 3-வது சுரங்கம் அமைத்தால் 26 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மாவட்ட கலெக்டர் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் என்.எல்.சி. நிர்வாகமோ, தமிழக அரசோ நிலம் கையகப்படுத்த முற்பட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் கண்ணன், உட்கட்சி தேர்தல் அதிகாரி ஜம்புலிங்கம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story