மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பாலிடெக்னிக் மாணவர் பலி
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்துபோனார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சோழவந்தான்,
சோழவந்தான் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சதகத்துல்லா. இவருடைய மகன் ஆசிப்(வயது 19). இவர் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர், தனது நண்பர்களான அதே தெருவை சேர்ந்த இப்ராகிம்ஷா(19), முகமது ரிலவான்(19) ஆகியோருடன் வாடிப்பட்டியை சேர்ந்த நண்பர்களை பார்ப்பதற்காக நேற்று சென்றார். அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் 3 பேரும் சோழவந்தான் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல் தென்கரையை சேர்ந்த முருகன் மகன் முரளி(25), இவரது நண்பர் தினேஷ்(20) ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
ஆசிப் உள்பட 3 பேர் வந்த மோட்டார் சைக்கிளும், முரளி மற்றும் தினேஷ் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் வாடிப்பட்டியை அடுத்த மேட்டுநீரேத்தான் ஊருணி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆசிப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.
உடன் வந்த இப்ராகிம்ஷா, முகமது ரிலவான், தென்கரையில் இருந்து வந்த முரளி, தினேஷ் ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.