கிராமப்புறங்களில் பாலிதீன் பைகள் வினியோகம் தாராளம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கிராமப்புறங்களில் தாராளமாக பாலிதீன் பைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருமங்கலம்,
தமிழக அரசு கடந்த 1–ந்தேதி முதல் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. அதன்படி அனைத்து மாநகராட்சி, நகராட்சி, கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடைகளில் யாரும் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது. மீறினால் அபராதம், லைசென்ஸ் ரத்து உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர், நகராட்சியில் ஆணையாளர், சுகாதார அலுவலர்கள் உள்பட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் மாற்று பொருட்கள் பயன்படுத்த அறிவுறுத்தி வருவதுடன், அந்த பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் கிராமங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையை கடைக்காரர்கள், பொதுமக்கள் உள்பட யாரும் கடைபிடிக்கவில்லை. தாராளமாக பாலிதீன் பைகள் கிடைக்கிறது. கிராமப்புற கடைகளில் பலசரக்கு கொடுப்பது, காய்கறிகள் விற்பனை செய்வது, டீக்கடைகளில் பார்சல் டீ கொடுப்பது உள்பட எல்லா தேவைக்கும் பாலிதீன் பைகளையே தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சேர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. அரசு தடை விதித்தும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கிராமப்புறங்களில் அதிகம் உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் நகர்ப்புறங்களில் மட்டும் ஆய்வு செய்கிறார்கள். கிராமங்களில் ஆய்வு செய்வது கிடையாது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே முழுமையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க கிராமப்புறங்களிலும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும். மேலும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்து உரிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.