மீன்பிடிக்க சென்றபோது மாயமான 7 பேரை மீட்க கோரி உடுப்பியில், கடலோர மாவட்ட மீனவர்கள் பேரணி


மீன்பிடிக்க சென்றபோது மாயமான 7 பேரை மீட்க கோரி உடுப்பியில், கடலோர மாவட்ட மீனவர்கள் பேரணி
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடிக்க சென்றபோது மாயமான 7 மீனவர்களை மீட்க கோரி நேற்று உடுப்பியில் கடலோர மாவட்ட மீனவர்கள் பேரணி சென்றனர்.

மங்களூரு, 

மீன்பிடிக்க சென்றபோது மாயமான 7 மீனவர்களை மீட்க கோரி நேற்று உடுப்பியில் கடலோர மாவட்ட மீனவர்கள் பேரணி சென்றனர். இதில் மந்திரி, கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்துக்கட்சியினரும் பங்கேற்றனர்.

7 மீனவர்கள் மாயம்

உடுப்பி அருகே மல்பே மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி ‘சுவர்ண திரிபூஜா’ என்ற படகில் 7 பேர் மீன்பிடிக்க அரபிக்கடலுக்கு சென்றனர். ஆனால் அவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களுடைய குடும்பத்தினர் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலோர காவல் படையினர் 7 பேரையும் தீவிரமாக தேடினார்கள். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பதும் சந்தேகமாக உள்ளது. மீனவர்கள் மாயமாகி 24 நாட்கள் ஆகியும் அவர்களை பற்றி எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், உடுப்பி மாவட்ட கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி ஆகியோர் தமிழ்நாடு, கோவா, மராட்டிய மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், கடலோர காவல் படையினரை தொடர்பு கொண்டு மாயமான மீனவர்களின் விவரங்களை தெரிவித்தனர். அவர்களும், மாயமான மீனவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மீனவர்கள் பேரணி

இந்த நிலையில் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், நேற்று முன்தினம் உடுப்பிக்கு வந்தார். அவர் உடுப்பி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், போலீஸ் சூப்பிரண்டு லட்சுமண் நிம்பர்கி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் முடிந்து மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், மாயமான மீனவர்களை கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி இன்னும் எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

இந்த நிலையில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி நேற்று தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள், பல்வேறு அமைப்பினர், அனைத்துக்கட்சியினர் என ஆயிரக்கணக்கானோர் உடுப்பியில் திரண்டனர். அவர்கள் மல்பேயில் இருந்து அம்பல்பாடி சந்திப்பு வரை பேரணியாக சென்றனர். இதில் மீனவர்களுக்கு ஆதரவாக உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயமாலா, கலெக்டர் பிரியங்கா மேரி பிரான்சிஸ், சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி எம்.பி. ஷோபா, எம்.எல்.ஏ.க்கள் ரகுபதிபட், பரத்ஷெட்டி உள்பட பலர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை

பின்னர் அவர்கள், மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயமாலா வழியாக மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனுவை கொடுத்தனர். பின்னர் அவர்கள் மீனவர்களை மீட்க மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மீனவர்களை மீட்க வலியுறுத்தி நேற்று தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

இந்த பேரணி அமைதியான முறையில் நடந்தது. இதில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

உடுப்பியில் நேற்று மீனவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மீனவர்களை மீட்க வலியுறுத்தி பேரணி சென்றதால், காலை 9 மணி முதல் 1 மணி வரை மங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டன.

Next Story