நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் சிவசேனாவையும் தோற்கடிப்போம் அமித்ஷா பரபரப்பு பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் சிவசேனாவையும் தோற்கடிப்போம் அமித்ஷா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 5:00 AM IST (Updated: 7 Jan 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் சிவசேனாவையும் தோற்கடிப்போம் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் சிவசேனாவையும் தோற்கடிப்போம் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்

கூட்டணியில் குழப்பம்

மராட்டியத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று லாத்தூர் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது லாத்தூர், உஸ்மனாபாத், ஹிங்கோலி மற்றும் நாந்தெட் பகுதி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்

அப்போது அவர் கூறியதாவது:-

பிரசாரம்

பா.ஜனதா நாட்டின் மிகப்பெரிய கட்சியாகும். இக்கட்சியில் 11 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, பா.ஜனதாவின் வசம் வெறும் 6 மாநிலங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது நாடு முழுவதும் 16 மாநிலங்களில் நாம் அதிகாரத்தில் இருக்கிறோம்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் நமது கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்ட நலத்திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்யவேண்டும்.

சிவசேனாவுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணியாக இணைந்து வெற்றியை உறுதி செய்வோம். இல்லையெனில் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து முன்னாள் கூட்டணியையும் தோற்கடிப்போம்.

பாடம் புகட்டுவார்கள்

காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது ஆனால் அவர்களால் வளர்ச்சியை உருவாக்க முடியவில்லை. ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சொந்த வீடுகள் இல்லை. பா.ஜனதா பதவிக்கு வந்த பிறகு தான் பல்வேறு துறைகளில் நம் நாடு வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மிகவும் அவசியமாகும்.

ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் ஏதும் நடக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியும், சோனியாவும் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.

Next Story