அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 16-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி


அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 16-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Jan 2019 4:15 AM IST (Updated: 7 Jan 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி நடக்கிறது.

திருவண்ணாமலை,

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் காலத்தை உத்தராயண புண்ணியகாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலத்தை சிவாலயங்களில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், உத்தராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான உத்தராயண புண்ணியகால உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணியளவில் அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கல இசையுடன் கொடியேற்றினர்.

அப்போது சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மாட வீதியில் வீதியுலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உத்தராயண புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு மார்கழி மாத இறுதி வரை காலை மற்றும் இரவு நேரங்களில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி (தை 1) உத்தராயண புண்ணியகாலம் தாமரை குளத்தில் தீர்த்தவாரிக்கு சென்று வருதல் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

மறுநாள் 16-ந் தேதி அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் உற்சவமும் மறுநாள் மறுவூடல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story