மாவட்டம் முழுவதும் 7¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கி தொடங்கி வைத்தார்


மாவட்டம் முழுவதும் 7¼ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Jan 2019 5:00 AM IST (Updated: 7 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவதை ஆரணியில் நடந்த விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆரணி,

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கும் விழா ஆரணி அண்ணா சிலை அருகே உள்ள வைகை கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.

கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ப.ரேணுகாம்பாள், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆரணி செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, தாசில்தார் கிருஷ்ணசாமி, வட்ட வழங்கல் அலுவலர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, தமிழக அரசு அறிவித்தபடி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்புத் துண்டு, வேட்டி, சேலை மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 643 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் உதவித் தொகை பெறுபவர்கள், ‘அந்தோதியா அன்னயோஜனா’ குடும்ப அட்டைதாரர்கள், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், காவல்துறை பணியாளர்களுக்கான குடும்ப அட்டைதாரர்கள், அன்னபூர்ணா குடும்ப அட்டைதாரர்கள், எப்பொருளும் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் என 7 லட்சத்து 28 ஆயிரத்து 576 அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு பையும், வேட்டி சேலைகளும் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசுக்கு என்றென்றும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, குண்ணத்தூரில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் ஆயிரத்து 96 உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் போனசை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் மேற்கு ஆரணி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, வைகை கூட்டுறவு பண்டகசாலையின் துணைத்தலைவர் குமரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பி.ஜி.பாபு, சேவூர் ஜெ.சம்பத், அசோக்குமார், எஸ்.ஜோதிலிங்கம், ராஜமாணிக்கம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழன் நன்றி கூறினார்.


Next Story