அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும்
அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என நாமக்கல்லில் நடந்த சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நாமக்கல்,
தங்க தமிழ்நாடு கட்டுமான, அமைப்புசாரா, விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் பொன்வேல்சாமி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் நகர பஸ்களில் இலவச பயண அனுமதி அட்டை வழங்க வேண்டும். நலவாரிய பதிவிற்கு ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும் என அறிவிக்க வேண்டும்.
நலவாரிய பதிவிற்கு அரசு அதிகாரிகள் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று ஏதாவது ஒன்றை மட்டும் நடைமுறையாக்க வேண்டும். வருவாய் வட்டங்கள் தோறும் தொழிலாளர் நலவாரிய அலுவலகங்களை அமைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்க சட்டம் இயற்றிட வேண்டும். கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக அரசு செலவில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளில் தகுதியானவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறந்து 3 யூனிட் மணல் ரூ.20 ஆயிரத்துக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான மூலப் பொருட்களான மணல், சிமெண்டு, கம்பி, பெயிண்டு, மரம் போன்ற பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில பொதுச்செயலாளர் பெருமாள், பொருளாளர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் கந்தசாமி, தலைவர் விஜயா துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story