பிளாஸ்டிக் தடை எதிரொலி: வாழை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ அதிகரிக்கிறது துண்டு இலைகளையும் விற்று லாபம் பார்க்கும் வியாபாரிகள்


பிளாஸ்டிக் தடை எதிரொலி: வாழை இலைக்கு மீண்டும் ‘மவுசு’ அதிகரிக்கிறது துண்டு இலைகளையும் விற்று லாபம் பார்க்கும் வியாபாரிகள்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:45 AM IST (Updated: 8 Jan 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் தடை எதிரொலி காரணமாக வாழை இலையின் ‘மவுசு’ மீண்டும் அதிகரிக்கிறது. வீணாகும் துண்டு இலைகளையும் விற்று வியாபாரிகள் லாபம் பார்க்கின்றனர்.

சென்னை,

பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பொருட்கள் மீதான தமிழக அரசின் தடை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி மக்களின் அன்றாட தேவைகளில் இன்றியமையாத பொருளாக இருந்த பிளாஸ்டிக் பைகளுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை வெகுவாகவே நிறுத்தி விட்டனர்.

இதனால் நடைபாதை உணவகம் முதல் ஓட்டல்கள் வரை தற்போது வாழை இலை அடங்கிய தட்டுகளிலேயே உணவுகள் பரிமாறப்பட்டு வருகின்றன. இறைச்சி கடைகளில் மந்தார இலைகளிலேயே இறைச்சி மடித்து தரப்படுகிறது.

மளிகை கடைகளிலும் பொட்டலம் கட்டும் நடை முறைக்கு திரும்பி இருக்கிறது. இதனால் மக்களிடையே தவிர்க்க முடியாத அங்கமாக இருந்த பிளாஸ்டிக் பைகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை காரணமாக தமிழர்களின் கலாசாரத்தில் முக்கிய அங்கம் வகித்த வாழை இலையின் மகத்துவம் மீண்டும் திரும்பிட தொடங்கி இருக்கிறது. இதற்கு முன்பு ஓட்டல்களில் உணவு பரிமாறப்படுவதே பிளாஸ்டிக் கவரில் தான். ஆனால் தற்போது அனைத்து உணவகங்களிலும் வாழை இலை முக்கிய அம்சமாக இடம் பிடிக்க தொடங்கி இருக்கிறது.

அதேபோல ‘ஏழைகளின் அறுசுவை பவன்’ என்று அழைக்கப்படும் சாலையோர கடைகளில் தையல் இலைகள் எனும் மந்தார இலைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. இத்தனை நாட்கள் பிளாஸ்டிக் கவரில் உணவை சாப்பிட்டு வந்த மக்கள், மந்தார இலைகளில் ருசியாக சாப்பிடுவதை பார்க்க முடிகிறது.

பிளாஸ்டிக் வீழ்ச்சியின் காரணமாக, வாழை இலைகளின் மவுசு மீண்டும் திரும்பி இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. முன்பு தலைவாழை, தட்டு இலைக்கு போக மீதமுள்ள வாழை இலையின் பெரும்பாலான பாகங்கள் குப்பை தொட்டிக்கு செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது வாழை இலையின் சிறிய பாகத்தையும் கவனத்துடன் வியாபாரிகள் எடுத்து வைக்கின்றனர். கால்மிதி படும் வாழை இலைக்கும் தனி விலை என்பதால் வியாபாரிகள் கண்ணுக்கு கண்ணாக வாழை இலைகளை பார்த்து துண்டு இலைகளையும் விற்று லாபம் பார்க்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு வாழை இலை வியாபாரிகள் பார்த்தசாரதி, பாஸ்கர், ரமேஷ், மணி ஆகியோர் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சராசரியாக 10 லோடுகளில் (53 ஆயிரம் கட்டு வரை) நெல்லூர், கடப்பா உள்பட ஆந்திர பகுதிகளிலும், மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி போன்ற தமிழக பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் கொண்டு வரப்படும். இந்த வாழை இலைகள் தட்டு, செவ்வக பிளேட் மற்றும் தலை வாழை என 3 விதங்களில் கிழிக்கப்படும். மீதமுள்ள பாகங்கள் கீழே வீசப்படும்.

ஆனால் தற்போது வாழை இலைக்கு தாறுமாறான தேவை இருப்பதால் வாழை இலையை கிழிப்பதில் கவனமாக இருக்கிறோம். தற்போது தட்டு, செவ்வக பிளேட், சதுர பிளேட், தலை வாழை, அரை வாழை ஆகிய வடிவங்களில் கிழித்தது போக மீதமுள்ள சிறிய பாகங்களை பத்திரமாக எடுத்து வைக்கிறோம். அப்படி கிழிக்கப்படும் துண்டு இலைகளையும் இறைச்சி கடைக்காரர்கள், பூக்கடை வியாபாரிகள் விலைக்கு வாங்கி செல்கின்றனர். இதனால் 200 துண்டு இலைகள் ரூ.30 வரை விற்பனை ஆகிறது.

கடந்த வாரத்தில் ஒரு கட்டு வாழை இலை ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை ஆனது. தற்போது ஒரு கட்டு வாழை இலை ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. வாழை இலையின் மவுசுக்கு வரத்தை காட்டிலும் மக்களின் தேவையே முக்கிய காரணமாகும். இதனால் முன்பை விட வாழை இலையின் வியாபாரத்தில் பர பரப்பை பார்க்க முடிகிறது.

அரசின் இந்த நடவடிக்கை நிச்சயம் வரவேற்கத்தக்கதாகும். அதேவேளை கம்ப்யூட்டர் இலை எனும் பிளாஸ்டிக் இலைகளையும் அரசு முழுமையாக ஒழித்திட வேண் டும். ஏனென்றால் ஆயிரம் தலை வாழை இலைகள் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. ஆனால் ரூ.600-க்கே ஆயிரம் கம்ப்யூட்டர் இலைகள் கிடைத்திடும் என்பதால் செலவு மிச்சம் கருதி மக்கள் அதை பயன்படுத்த வாய்ப்புண்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story