கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை


கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்திருந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்து ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்து கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வரிசையில் நின்ற பணகுடியை அடுத்த தளவாய்புரம் சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுவாமிதாஸ் (வயது 45) என்பவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், “கடந்த 30 வருடத்திற்கு முன்பு தளவாய்புரம் சத்யாநகரில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் எங்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டது. அந்த வீட்டிற்கு இதுவரைக்கும் நான் வீட்டு வரி செலுத்தி வருகிறேன். ஆனால் நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை நான் அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டேன். மேலும் கல்லூரியில் படிக்கும் எனது மகன் மற்றும் மகளுக்கு வங்கியில் கடன் வாங்குவதற்கு வீட்டுமனை பட்டா கேட்கின்றனர். இதனால் அவர்களின் படிப்பு செலவுக்காக என்னால் கல்வித்தொகையை செலுத்த முடியவில்லை. எனவே இதுகுறித்தும் அதிகாரிகளிடம் கூறி மனு கொடுத்து விட்டேன். ஆனால் அதிகாரிகள் எனக்கு பட்டா வழங்காமல் மறுத்து வருகின்றனர். இதனால் மனமுடைந்த நான் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்“ என்றார்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story