வாலிபர் கொலை வழக்கில் அ.தி.மு.க.-தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் அ.தி.மு.க.-தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2019 3:45 AM IST (Updated: 8 Jan 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் கொலை வழக்கில் அ.தி.மு.க.- தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 29). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 20 திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குளித்தலை - மணப்பாறை சாலையில் அய்யர்மலை அருகே உள்ள அரசு தானிய சேமிப்பு கிடங்கு பகுதியில் மகேஷ்வரன் தலையில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகேஷ்வரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குளித்தலை அருகே உள்ள சரவணபுரத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு மகன் பிச்சை (33). இவரும், இவரது உறவினரான நடுப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்வகுமாரும் (25) அய்யர்மலையில் பேக்கரி நடத்தி வருகின்றனர். அவர்களிடம் மகேஷ்வரன் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிச்சை, மகேஷ்வரனை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் எனக்கூறி அய்யர்மலை அருகேயுள்ள அரசு தானிய சேமிப்பு கிடங்கிற்கு வரச்சொல்லி இருக்கிறார்.

அங்கு பிச்சை, செல்வகுமார், இவர்களின் மாமாவான வரகூரை சேர்ந்தவரும் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவரும், லாலாபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவருமான பழனிவேல் (44), வரகூரை சேர்ந்த பெருமாள் (44), சின்னமலையாண்டிபட்டியை சேர்ந்தவரும், அப்பகுதி தி.மு.க. கிளை செயலாளருமான சுப்பிரமணியன் (38) ஆகியோரும் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மகேஷ்வரனுக்கும், பிச்சை உள்ளிட்ட 5 பேருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர்கள் மகேஷ்வரனின் பின்தலை, வலது கையில் அரிவாளால் வெட்டியும், கீழே தள்ளி தலையில் கல்லையும் போட்டுள்ளனர். மகேஷ்வரனை அரிவாளால் வெட்டும்போது செல்வகுமாரின் உள்ளங்கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த மகேஷ்வரனின் மனைவி சரஸ்வதியையும், தங்கையையும் வெட்டி விடுவதாக கூறி மிரட்டிய 5 பேரும் பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த செல்வக்குமார் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து மகேஷ்வரன் மனைவி சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த குளித்தலை போலீசார் பிச்சை, பெருமாள், பழனிவேல், சுப்பிரமணியன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story