அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு


அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மார்ஷல் ராயன் தலைமையில் இளைஞர்கள் கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அன்னமங்கலம் கிராமத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 20-ந் தேதி அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் 35 கிராமங்களை சேர்ந்த ஊர் நாட்டாண்மைகள் கொடுத்த மனுவில், பட்டியல் வகுப்பில் உள்ள 7 பெயர்களை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பு எங்களுடைய மனுவினை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பவில்லையென்றால் வருகிற 17-ந் தேதி அனைத்து கிராமத்திலும் வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவோம். 19-ந் தேதி தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒன்று சேர்ந்து பொது இடத்திற்கு வந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு உணர்வுகளை வெளிப்படுத்த உள்ளோம் என்று கூறப்பட்டிருந்தது.

வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில், அனுக்கூர் கிராமத்தில் நாங்கள் 10 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் அதற்கு இன்னும் வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. எனவே நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உடனடியாக பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு கல்வி அதிகாரி ஜெயராமன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு புத்தக கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்றால், அதற்கான பணிகள் 3 மாதங்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெறுவதற்கான ஆயுத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக கண்காட்சியினை இந்த ஆண்டும் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

குன்னம் தாலுகா பெரிய வெண்மணி வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மறுமுறை அவர்கள் மீண்டும் மனு கொடுக்க வருகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு முறையும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பஸ் கட்டணம், உணவு, குடிநீர், வேலையிழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மனு கொடுக்க வருபவர்களுக்கு பஸ் கட்டணம், உணவு, குடிநீர் மற்றும் ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 213 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குன்னம் தாலுகா புதுவேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த முத்தையன் மகன் செல்வன் வினோத் (வயது 12) வலங்கான் ஏரியில் மூழ்கி இறந்துபோனதற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை, அவரது குடும்பத்திற்கு கலெக்டர் சாந்தா வழங்கினார்.

இதேபோல் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் சிறந்த தரத்திலான கல்வியினை நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகள் மூலம் வழங்குவதற்கு ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 9 மாணவ- மாணவிகளுக்கான கல்வி கட்டணம், பராமரிப்பு மற்றும் விடுதி கட்டணங்களான ரூ.2 லட்சத்து 940-க்கான காசோலையையும், பதிவு பெறாத கட்டுமானத்தொழிலாளியான குன்னம் தாலுகா வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சிநாதன் பணியின்போது விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், தனித்துணை கலெக்டர் மனோகரன், தொழிலாளர் உதவி ஆணையர் முகம்மது யூசுப், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story