உணவு பொருட்களின் கலப்படத்தை மாணவர்கள் பரிசோதிக்க வேண்டும்; மாவட்ட அதிகாரி கலைவாணி பேச்சு


உணவு பொருட்களின் கலப்படத்தை மாணவர்கள் பரிசோதிக்க வேண்டும்; மாவட்ட அதிகாரி கலைவாணி பேச்சு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:45 AM IST (Updated: 8 Jan 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் உள்ள உணவு பொருட்களின் கலப்படத்தை மாணவர்கள் பரிசோதிக்க வேண்டும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கலைவாணி கூறினார்.

ஈரோடு,

உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அனைத்து வகையான உணவு பொருட்களுக்கும் குறிப்பிட்ட தரம் அவசியம். அதில் கலப்படம் இருந்தால் பொருட்களை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் நாம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் உள்ள கலப்படத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்களும் தங்களது வீடுகளில் உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதா? என்று பரிசோதிக்க வேண்டும்.

பாலில் அதிகமாக தண்ணீர் சேர்ப்பதும் ஒருவகை கலப்படம் தான். அதற்கு ஒரு கண்ணாடி துண்டை கையில் எடுத்து சாய்வாக பிடித்து கொள்ள வேண்டும். அதில் ஒருசில சொட்டு பால் ஊற்றி பார்த்தால், தூய்மையான பால் மெதுவாக ஓடும். அதுவே தண்ணீர் அதிகமாக கலந்து இருந்தால் வேகமாக செல்லும்.

தேனில் கலப்படம் உள்ளதை தண்ணீரில் ஒரு சொட்டு தேனை ஊற்றி பார்த்தால் தெரியும். அதுபோல் நிறமிகள் அதிகமாக சேர்க்கப்படும் பொருட்களை நாம் பயன்படுத்தக்கூடாது. அது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வெல்லம் தயாரிக்கும் இடத்தில் அழுக்கு எடுப்பதற்காக கரும்பு சாற்றில் சோடா உப்பு சேர்க்கப்படும். அதுவும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே சேர்க்க வேண்டும். அதிக அளவு சேர்த்தால் கலப்படம்தான். ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் வெல்லம் தயாரிப்பில் நிறங்களை பெறுவதற்காக செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படும் சூப்பர் பாஸ்பேட் சேர்க்கப்படுகிறது. இதை கண்டறிந்து வெல்லத்தை பறிமுதல் செய்து, தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.80–க்கும் கிடைக்கும், ரூ.180–க்கும் கிடைக்கும். ஆனால் அனைத்து பாக்கெட்களிலும் தூய்மையான கடலை எண்ணெய் என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் எண்ணெய் பாக்கெட்டில் ‘பிளண்டட்’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இது 2 எண்ணெய்களை கலந்து விற்பனை செய்வது. அதாவது கடலை எண்ணெயுடன், குறிப்பிட்ட சதவீதத்தில் பாமாயில் கலந்து விற்பனை செய்யப்படும். இதில் பாமாயில் எண்ணெய்க்கு நிறமும், மணமும் கிடையாது. எனவே அதில் சிறிது கடலை எண்ணெய் சேர்த்தவுடன் அதற்கு நிறமும், மணமும் வந்துவிடும். எனவே நாம் வாங்கும் பொருட்களின் தரத்தை அறிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக உணவு பொருட்களை கடைகளில் வாங்கும்போது தயாரிப்பு செய்த நாள், காலாவதியாகும் தேதி, உணவு பாதுகாப்புத்துறை அனுமதி எண் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கு தலா 2 மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்கள் தங்களது பள்ளிக்கூட ஆசிரியர்கள், மாணவ–மாணவிகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர்கள் பூபதி, பிரகாஷ், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story