‘அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கவேண்டும் என கூறுவதா?’ ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது சி.வி.சண்முகம் பாய்ச்சல்
சந்தேகத்தை கேட்டால், அமைச்சர்களை கட்டுக்குள் வைக்கவேண்டும் என கூறுவதா? என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றசாட்டு தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் நேற்று காலை நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம்,
திருவாரூர் மக்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் முழுமை அடையவில்லை. தேர்தல் ஆணையம் தமிழக அரசின் தலைமை செயலாளர் மூலம் கருத்து கேட்டபோது இன்னும் நிவாரண பணிகள் முடியவில்லை, நிவாரண பணிகள் முடிந்து தேர்தல் வைக்கலாம் என்று கருத்து சொல்லப்பட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்து விட்டது. இருந்தாலும் அ.தி.மு.க. எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க அச்சப்பட்டது இல்லை. நிவாரணப்பணிகள் முடிவடையாததால் மாவட்ட தேர்தல் அலுவலரின் கருத்தை கேட்டுதான் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. எனக்கு இந்த பதவி ஜெயலலிதா போட்ட பிச்சை, அவரின் உயிரைத்தான் எங்களால் காப்பாற்ற முடியவில்லை, எதுவும் செய்ய முடியாத ஊமையாக இருந்து விட்டோம். அது மிக பெரிய பாவச்செயல். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மூலம் உண்மை வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆணையம் பல்வேறு சந்தேகம் இருக்கிறது என்று சொல்லும்போது ஜெயலலிதாவின் தொண்டன் என்ற முறையில்தான் அந்த சந்தேகங்களை மேற்கோள்காட்டி சில கேள்விகளை எழுப்பினேன். அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள், அரசு அதிகாரிகளை அமைச்சர் கேள்வி கேட்கலாமா? என்று கேட்கிறார்கள். சந்தேகம் என்று வந்துவிட்டால் யாராக இருந்தாலும் கேள்வி கேட்கலாம். அனைவருக்கும் இந்த உரிமை உண்டு. ஆனால் அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, முதல்-அமைச்சரிடம் புகார் சொல்கிறார்கள். முறையீடு செய்வதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவர் கொடுத்த புகார் மனுவில் சொல்லப்பட்டு இருந்த வார்த்தையை முறையாக பயன்படுத்தி இருக்க வேண்டும். புகார் கொடுங்கள். ஆனால் அது தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அச்சுறுத்தும்விதமாக, மிரட்டும் விதமாக இருக்கக்கூடாது. அமைச்சர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அது சரியில்லை. அதனை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும்.
அதிகாரம் இல்லை
எங்களுக்கும் பேசத்தெரியும், சமூகநீதி நாடு இது. எங்களை கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் நான் கேள்வி கேட்டது யாரை, ஜெயலலிதாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது யார்? மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது யார்? அவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
ஆனால் அதிகாரிகளுக்கு இன்று யார் வக்காலத்து வாங்குகிறார்கள், எந்த குடும்பத்தை குற்றச்சாட்டு சொன்னேனோ, அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள், திருடன், திருடனுக்குத்தான் சாட்சி சொல்கிறார்.
தினகரன் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். உங்களுக்கு மட்டும்தான் பேச தெரியும் என்று நினைக்காதீர்கள். நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் ஆட்டம், பாட்டம் எல்லாம் உங்களது உல்லாச பங்களாவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனக்கும் பேசத்தெரியும், எங்களுக்கு அ.தி.மு.க.வில் அனைத்து உரிமையும் உண்டு, அடிமட்ட தொண்டராக நாங்கள் வந்தோம், நீங்கள் அந்த வீட்டிற்கு எடுபுடி வேலை செய்ய வந்த வேலைக்காரர்கள். வேலைக்காரர்களாக வந்து அந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் நீங்கள், ஜெயலலிதாவின் உயிரை பறித்தவர்கள் நீங்கள், அவர் சிறைக்கு செல்ல காரணமானவர்கள் நீங்களும், உங்கள் குடும்பமும். அதை மறந்துவிட்டு பேசக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குரல் அ.தி.மு.க. தொண்டர்களின் குரலாக தான் இருந்தது. யார் மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டு கூற வேண்டும் என்ணம் இல்லை. ஆனால், இந்தியாவில் பெரிய தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் சில சந்தேகங்கள் இருக்கிறது. இதையொட்டி சட்ட அமைச்சர் கருத்து கூறும் போது, அதை தெளிவுப்படுத்த வேண்டும் என்பது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் கடமை. அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கூறியது தான் வேதனைக்குரியது.
ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை வரும் போது, உணர்வுப்பூர்வமாக அ.தி.மு.க. தொண்டர்கள் கருத்து கூறத்தான் செய்வார்கள். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்ற கருத்தை உதாசீனப்படுத்தக்கூடாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் விசாரணை நடத்த விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று தான் சட்ட அமைச்சர் உட்பட நானும் கருத்து தெரிவித்து இருக்கிறேன். எங்களை பொறுத்தவரை ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மை நிலையை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. எல்லா விதத்திலும் தயாராக தான் இருந்தது. தேர்தலை கண்டு எப்போதும் அ.தி.மு.க. பயந்தது கிடையாது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானவுடனே அதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. திருவாரூரில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story