வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 5 பேருக்கு 7 ஆண்டு சிறை


வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 5 பேருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 7 Jan 2019 11:45 PM GMT (Updated: 7 Jan 2019 10:27 PM GMT)

பல்லடம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 5 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பல்லடம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 43). இவர் திருமலைநகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (35). கடந்த 12.8.2017 அன்று காலை 5.45 மணிக்கு வீட்டின் கதவை திறந்து கொண்டு லட்சுமி வெளியே வந்தார்.

அப்போது வீட்டின் காம்பவுண்டுக்குள் 5 ஆசாமிகள் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருப்பதையும், பிரதான கேட் அருகில் மேலும் 4 பேர் நிற்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த ஆசாமிகள், திடீரென்று லட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் நகை மற்றும் பணம் இருக்கும் இடத்தை கூறுமாறு மிரட்டினார்கள். அப்போது லட்சுமி கூச்சல் போடவும், வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த வெங்கட்ராமனும் அதிர்ச்சியில் உறைந்துபோய் கூச்சல்போட்டார். கணவன்–மனைவி இருவரின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் 3 பேரை பொதுமக்கள் பிடித்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 6 பேரும், தாங்கள் வந்த வேனில் தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் விசாரித்தபோது வெள்ளகோவிலை சேர்ந்த கார்த்திகேயன் (33), உடுமலையை சேர்ந்த அருண்குமார் (34) மற்றும் சேடபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார் (21) என தெரியவந்தது. இதையடுத்து வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த விஸ்வா (31), காங்கேயத்தை சேர்ந்த சுரேஷ் (31), சூலூரை சேர்ந்த பவுத்திரன் (23), நாகை மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் (20), குன்னக்கல்பாளையத்தை சேர்ந்த பாண்டி (30) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நண்பர்களான இவர்கள் 9 பேரும், சேர்ந்து வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது

இதையடுத்து இவர்கள் 9 பேர் மீதும் திருப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் பல்லடத்தில் சார்பு நீதிமன்றம் தொடங்கப்பட்ட பிறகு, இந்த வழக்கு பல்லடம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மீனா சந்திரா விசாரித்து வந்தார்.

வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயன், அருண்குமார், ராஜ்குமார், விஸ்வா மற்றும் சுரேஷ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். பவுத்திரன், ஸ்டீபன், பாண்டி மற்றும் தினேஷ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு வக்கீல் எம்.பொன்னுசாமி ஆஜராகி வாதாடினார்.


Next Story