தாராபுரத்தில் சாலையோரமாக வீசப்பட்ட 25 மூடை பிளாஸ்டிக் கழிவுகள் பொதுமக்கள் அதிர்ச்சி


தாராபுரத்தில் சாலையோரமாக வீசப்பட்ட 25 மூடை பிளாஸ்டிக் கழிவுகள் பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 8 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் சாலையோரமாக வீசப்பட்ட 25 மூடை பிளாஸ்டிக் கழிவுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தாராபுரம்,

தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சாலையோரமாக நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த மூடைகளை 2 பேர் சாலையின் ஓரமாக வீசினார்கள். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், லாரியை நோக்கி வேகமாகச் சென்றனர். இதை பார்த்த லாரி டிரைவர், லாரியை அங்கிருந்து ஓட்டிச்சென்று விட்டார்.

பின்னர் சாலையோரமாக வீசப்பட்டு இருந்த மூடைகளை பொதுமக்கள் பிரித்து பார்த்தனர். அப்போது அதில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. மொத்தம் அங்கு 25 மூடைகள் கிடந்தன. அவை அனைத்திலும் பிளாஸ்டிக் கழிவுகளே இருந்தன.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

கரூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து மணல், சிமெண்ட் மற்றும் இதரப் பொருட்களும், மாடுகளும் லாரிகள் மூலம் கேரளாவிற்கு தாராபுரம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகள் கேரளாவிற்கு சென்று பொருட்களை இறக்கிவிட்டு, மீண்டும் அந்த லாரிகள் காலியாக, தாராபுரம் வழியாகவே அந்தந்த மாவட்டங்களுக்கு செல்கின்றன.

அப்போது கேரளாவில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை, பெரிய பெரிய மூடைகளாக கட்டி, காலியாக வரும் லாரிகளில் போடுவதாக கூறப்படுகிறது. எனவே கேரளாவில் இருந்து இந்த பகுதிக்கு வரும் அனைத்து லாரிகளையும் சோதனை செய்ய வேண்டும். இதற்காக பொள்ளாச்சி சாலையில் ஒரு சோதனை சாவடி அமைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நகராட்சிக்கு அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் கழிவு மூடைகள் அப்புறப்படுத்தப்பட்டது,


Next Story