டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரே‌ஷன் கார்டுகளை வீசியெறிந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரே‌ஷன் கார்டுகளை வீசியெறிந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Jan 2019 11:30 PM GMT (Updated: 7 Jan 2019 10:27 PM GMT)

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரே‌ஷன் கார்டு, ஆதார் அட்டைகளை பொதுமக்கள் வீசியெறிந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பல்லடம் தாலுகா சாமளாபுரம் பேரூராட்சி பெருமாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் கிராமத்தில் விவசாய நிலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலம் பி.ஏ.பி. பாசன பகுதிக்கு உட்பட்டதாகும். இந்த பகுதியில் புகழ்பெற்ற மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி திருத்தலம் செல்லும் வழித்தடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு டாஸ்மாக் கடை திறப்பதன் மூலம் இந்த பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படும். மேலும், மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும். ஏற்கனவே சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் திறக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதனையும் மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடையை திறக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரே‌ஷன் கார்டு, ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகளை வீசினர். மேலும், சில பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை வீசியெறிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து டாஸ்£க் கடைக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். உடனே அதிகாரிகள் வந்து நடவடிக்கை மேற்கொள்வதாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில் ‘‘ தமிழக சட்டசபையில் கவர்னர் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் தமிழகத்தில் வறுமையில் உள்ள சில குடும்பங்களுக்கு வி.ஐ.பி. ரே‌ஷன் கார்டு, வெள்ளை ரே‌ஷன் கார்டு என வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு இந்த பொங்கல் பரிசுத்தொகை மற்றும் பொருட்கள் கிடைக்காது.

எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்லடம் அறிவொளிநகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரவளாக நீர் தொட்டி முழுவதுமாக நிறைந்துள்ளது. இதனை சரிசெய்வதாக கூறி திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.


Next Story