பல்லடம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
பல்லடம் அருகே லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பல்லடம்,
திருப்பூரை அடுத்த சாமளாபுரம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தாமணி. இவர்களுக்கு உலகநாதன் (21), கோகுல் (19) என்ற 2 மகன்களும், அர்ச்சனா (17) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களில் உலகநாதன் பல்லடம் லட்சுமி மில்ஸ் அருகே உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றுகாலை கல்லூரிக்கு உலகநாதன் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கோடங்கிபாளையத்தை அடுத்த கொத்துமுட்டிப்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி உலகநாதன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் பின்புறம் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த உலகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உலகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.