அடுக்குமாடி கட்டிட வீட்டில் பயங்கர தீ வருமான வரித்துறை அதிகாரி மனைவி உடல் கருகி சாவு புனேயில் பரிதாபம்


அடுக்குமாடி கட்டிட வீட்டில் பயங்கர தீ வருமான வரித்துறை அதிகாரி மனைவி உடல் கருகி சாவு புனேயில் பரிதாபம்
x
தினத்தந்தி 8 Jan 2019 4:01 AM IST (Updated: 8 Jan 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் அடுக்குமாடி கட்டிட வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வருமான வரித்துறை அதிகாரியின் மனைவி உடல் கருகி பலியானார்.

புனே,

புனே உன்ட்ரி கட்நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 9-வது மாடியில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார். வருமான வரித்துறை அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி காமினி(வயது45). இவர்களுக்கு சுர்ஜித் என்ற மகன் இருக்கிறான். இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இவர்களுடன் காமினியின் தாய், தந்தை ஆகியோரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் இருவரும் வெளியில் சென்றிருந்தனர். சந்தோஷ்குமார் மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் இருந்தார்.

தீ விபத்து

அப்போது, திடீரென வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் இருந்து குபுகுபுவென புகை வெளியேறி கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

வீட்டிற்குள் காமினி உடல் கருகிய நிலையில் கிடந் தார். சந்தோஷ்குமாரும் பலத்த தீக்காயம் அடைந்து இருந்தார். சிறுவன் சுர்ஜித் வீட்டின் இன்னொரு அறையில் இருந்ததால் அவன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியது தெரியவந்தது.

சாவு

தீயணைப்பு படையினர் சந்தோஷ்குமார், காமினி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு காமினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சந்தோஷ்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் காமினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தோஷ்குமார் வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரை அடுப்புடன் இணைக்கும் போது, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story