கடந்த ஆண்டில் ஒரு கோடி பேர் வேலை இழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும் சிவசேனா தாக்கு


கடந்த ஆண்டில் ஒரு கோடி பேர் வேலை இழப்புக்கு மோடி பொறுப்பேற்க வேண்டும் சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 8 Jan 2019 4:17 AM IST (Updated: 8 Jan 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

கடந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடி பேர் வேலை இழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 1 கோடியே 9 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை சுட்டிக்காட்டி நேற்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:-

மிகப்பெரிய வாக்குறுதி

பிரதமர் நரேந்திர மோடி சுமார் 70 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளதாக கூறி அதன் புகழை தனதாக்கிக்கொள்கிறார்.

இதேபோல் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடியே 9 லட்சம் பேரின் வேலைகள் பறிபோனதற்கும் அவர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

பா.ஜனதா அரசு வேலையின்றி தேடி அலையும் இளைஞர்களின் உணர்ச்சிகளோடு விளையாடக்கூடாது.

முதலில் நீங்கள் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள், பின்னர் அதை நிறைவேற்றிவிட்டதாக நீங்களே கூறுகிறீர்கள். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இதன்மூலம் யாரும் பயன் அடைந்ததாக தெரியவில்லை.

வாய் சவடால்

வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டதாக நீங்கள் உருவாக்கிய நீர் குமிழி கடைசியில் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையால் உடைந்துவிட்டது.

உங்களால் இங்குள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. பின்னர் ஏன் ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாய் சவடால் விடுகிறீர்கள். சுமார் 65 லட்சம் பெண்கள் வேலையை இழந்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து பெண்கள் உரிமை குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

இது மத்திய அரசின் மிகப்பெரிய தோல்வி. இதை நீண்ட நாட்களுக்கு மூடி மறைக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story