அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளை களைய அமைத்த “சித்திக் கமிட்டி அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு ஊழியர் ஊதிய முரண்பாடுகளை களைய அமைத்த “சித்திக் கமிட்டி அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” தமிழக அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jan 2019 10:48 PM GMT (Updated: 2019-01-08T04:18:16+05:30)

“அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய அமைத்த சித்திக் கமிட்டி அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுங்கள்” என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அரையாண்டு தேர்வு மற்றும் ‘கஜா‘ புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு, நிவாரண பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லோகநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கடந்த 3-ந் தேதி அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதுவரை அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “ஊதிய முரண்பாடு குறித்து அமைக்கப்பட்ட சித்திக் கமிட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதை பரிசீலிக்க சில நாட்கள் அவகாசம் வேண்டும்“ என்று கேட்டுக்கொண்டார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் 21 மாத நிலுவைத்தொகை வழங்குவது தொடர்பான சித்திக் கமிட்டியின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைத்து ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அதன் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளையும், பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் வருகிற 11-ந்தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story