நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


நாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2019 12:20 AM GMT (Updated: 2019-01-08T05:50:30+05:30)

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

புதுச்சேரி, 

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், விஜயவேணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேர்தல் கமிட்டி அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. கமிட்டியின் நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் எனக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். புதுவையில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமை எடுக்கும் முடிவு இறுதியானது. இருப்பினும் நாங்கள் எங்கள் கருத்தை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story