பொங்கல் பரிசுடன் அனைத்து வகை குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் கலெக்டர் ராமன் தகவல்
ரேஷன் கடைகளில் அனைத்து வகை குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கப்படும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றுடன், ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை அவர் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளுக்கு நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுடன் ரூ.1000 வாங்குவதற்காக ரேஷன் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எந்த எண் குடும்ப அட்டையில் இருந்து எந்த எண் குடும்ப அட்டை வரை பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அந்தந்த ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் சென்று பொங்கல் பரிசு மற்றும் ரூ.1,000 பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும், குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும், ரூ.1,000 கிடையாது என்று கூறப்பட்டது. அதேபோன்று சில ரேஷன் கடைகளிலும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் ராமன் கூறியதாவது:–
பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த குடும்ப அட்டைக்கு எந்த தேதியில் வழங்கப்படும் என்று எழுதிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சர்க்கரை மட்டும் வழங்கப்படும் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்படும், ரூ.1,000 கிடையாது என்று யாரும் கூறவில்லை. ரேஷன் கடை விற்பனையாளர்கள் யாராவது அப்படி கூறினால் அவர்கள் தெரியாமல் கூறியிருக்கலாம். அனைத்து வகை குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்கப்படும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.