ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை மர்மநபர்கள் சூட்கேசை தண்டவாளத்தில் வீசிச்சென்றனர்


ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை மர்மநபர்கள் சூட்கேசை தண்டவாளத்தில் வீசிச்சென்றனர்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:45 AM IST (Updated: 8 Jan 2019 6:30 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் காண்டிராக்டரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து விட்டு சூட்கேசை தண்டவாளத்தில் வீசிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை,

ஈரோடு மாவட்டம் கோலநல்லி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). மார்பிள்ஸ் காண்டிராக்டர். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கொடுப்பதற்காக சூட்கேசில் எடுத்து கொண்டு ஈரோடு ரெயில்வே நிலையத்திற்கு வந்தார்.

ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டியில் ஏறினார்.

ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும் பெரியசாமி சூட்கேசை தலைக்கு அடியில் வைத்து தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சூட்கேசை திருட திட்டம் தீட்டினர்.

இந்தநிலையில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் பணம் இருந்த சூட்கேசை பெரியசாமிக்கு தெரியாமல் திருடிச்சென்றனர்.

சிறிதுநேரம் கழித்து கண்விழித்து பார்த்த பெரியசாமி சூட்கேஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் சென்னைக்கு ரெயில் வந்ததும் அங்குள்ள ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்தது ஜோலார்பேட்டை அருகே என்பதால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் ஒரு சூட்கேஸ் கிடப்பதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அது திருடப்பட்ட பெரியசாமியின் சூட்கேஸ் என்பதும், மர்மநபர்கள் பணத்தை எடுத்துவிட்டு சூட்கேசை மட்டும் தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றதும் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.


Next Story