நல்லம்பள்ளி, பென்னாகரத்தில் 1,465 பேருக்கு ரூ.3.93 கோடி நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
நல்லம்பள்ளி, பென்னாகரத்தில் நடந்த விழாக்களில் 1,465 பேருக்கு ரூ.3.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லம்பள்ளி தாசில்தார் பழனியம்மாள் வரவேற்றார்.
இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட 12 துறைகளின் சார்பில் 601 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர்கூறுகையில், அரசு செயல்படுத்தும் திட்டங்களில் தகுதியுடைய நபர்கள் முறையாக விண்ணப்பித்து அந்த நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுவதுடன் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும், என்று கூறினார்.
இதேபோன்று பென்னாகரத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 864 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நல்லம்பள்ளி மற்றும் பென்னாகரத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மொத்தம் 1,465 பயனாளிகளுக்கு ரூ.3.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் பாபு, முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரெங்கநாதன், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் குருநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சிவப்பிரகாசம், ஜோதிபழனிசாமி, பெரியண்ணன், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், பேரூராட்சி செயல்அலுவலர் ஜலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பென்னாகரம் தாசில்தார் பிரசன்னமூர்த்தி நன்றி கூறினார்.