கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2019 4:15 AM IST (Updated: 8 Jan 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு, மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஹரிராவ், இந்தியன் வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்துரு, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயலாளர் காமராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சி.பி.எஸ். திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச மாத ஊதியமாக அனைவருக்கும் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதி உச்சவரம்பை நீக்கி, பணிக்கொடையை உயர்த்த வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணிகளை வரன்முறை படுத்தி, காலிப்பணியிடங்களை சட்டபூர்வமாக நிரப்பிட வேண்டும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, பொது வினியோக முறையை வலுப்படுத்த வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறையிகளின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்து கார்ப்பரேட்களை காப்பாற்றுவதை கைவிட வேண்டும். ரெயில்வே, இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினார்கள். இதில், வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தொலைத்தொடர்பு ஊழியர்கள் பங்கேற்றனர். வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் நிறுத்தப்பட்டு வங்கி மூடப்பட்டிருந்தது. இதனால் வங்கிகளுக்கு சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

Next Story